பிரதமர் பதவி விலக பா.ஜ.க. வலியுறுத்தல்!

சனி, 7 ஜூன் 2008 (12:21 IST)
நாட்டின் பணவீக்க விகிதம் 8.24 விழுக்காடாக அதிகரித்துள்ளதையடுத்து ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது குற்றம்சாட்டிய பா.ஜ.க., பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பொருளாதார பிரதமரான நீங்கள் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியவில்லையெனில், இந்தியாவை வழி நடத்த முடியவில்லை எனில் பதவி விலகிவிடுங்கள்" என்றார்.

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபோதும் பணவீக்கம் அதிகரித்தது, இப்போது அவர் பிரதமராக உள்ளபோதும் நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்றார் அவர்.

நிதியமைச்சர் ப. சிதம்பரம், இரண்டு வாரங்களில் நிலைமை சீரடையும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது 8 வாரங்கள் ஆகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை, சாமானிய மக்களின் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று ரவிசங்கர் பிரசாத் குற்றஞ்சாட்டினார்.

வேளாண் உற்பத்தியும் அபரிமிதமாக உள்ளது என்று மத்திய வேளாண் அமைச்சர் ஷரத் பவார் கூறியுள்ளார், ஆனால் இதனாலும் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.

நாட்டின் உணவுப் பொருளாதாரத்தை ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சரிவர நிர்வகிக்கவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது என்று‌ம் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்