உலகம் வெப்பமயமாதலுக்கு வளர்ந்த நாடுகளே காரணம்: இந்தியா!
புதன், 28 மே 2008 (20:24 IST)
உலகம் வெப்பமயமாதல் நிகழ்விற்கு வளர்ந்த நாடுகள் தாங்கள் வெளியேற்றும் கிரீன் ஹவுஸ் வாயுக்களைக் கட்டுப்படுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்காததே காரணம் என்று இந்தியா குற்றம் சாற்றியுள்ளது.
புது டெல்லியில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் கபில்சிபல், கார்பன் வெளியேற்றம் தொடர்பான சிக்கல்களுக்கு 'மாற்று மற்றும் செயலாக்கத்தக்க' தீர்வுகளைக் காண்பது பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது என்றார்.
இந்தியா, சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச அளவில் தரப்படும் அழுத்தம் பற்றிக் குறிப்பிட்ட அவர், தங்கள் நாடுகளில் வெளியேறும் மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தோல்வியடையும் போதெல்லாம் மூன்றாம் உலக நாடுகளைக் குறிவைப்பது மேற்கத்திய நாடுகளுக்கு வழக்கமாகிவிட்டது என்றார்.
பருவநிலை மாற்றத்தை உள்வாங்கிக் கொள்வதற்கு ஏற்றவாறு வளர்ந்த நாடுகளுக்கு பசுமைத் தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என்ற அமைச்சர் கபில்சிபல், சுற்றுச்சூழல் பிரச்சனைகளைப் பேசும்போது அரசியலைத் தள்ளிவைக்குமாறு வளர்ந்த நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பிரச்சனைகளை அரசியல் மேலும் சிக்கலாக்குமே தவிர அவற்றைத் தீர்க்காது. எனவே சுற்றுச்சூழல் பிரச்சனைகளைப் பேசும்போது அரசியலைத் தள்ளிவைக்க வேண்டும் என்றார் அவர்.
ஐ.நா.வின் பருவநிலை மாற்றத்திற்கான ஆய்வறிக்கையின்படி, ஒரு நபருக்கு 3 டன் என்ற சராசரி கார்பன் வெளியேற்ற அளவு இந்தியாவில் குறைவாக உள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் கபில்சிபல், இந்த அளவு மேலும் அதிகரிக்காமல் தடுப்பதற்கான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.