வேளாண் கடன் தள்ளுபடி 20 விழுக்காடு உயர்வு!
வெள்ளி, 23 மே 2008 (16:45 IST)
வேளாண் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பெரிய விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அத்திட்டத்தை 20 விழுக்காடு வரை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது.
இதன்படி வேளாண் கடன் தள்ளுபடித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.60,000 கோடியில் இருந்து ரூ.71,600 கோடியாக அதிகரிக்கப்பட உள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட வேளாண் கடன் தள்ளுபடித் திட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 237 மாவட்டங்களில், பெரிய விவசாயிகள் உள்பட எல்லா விவசாயிகளும் அவர்கள் பெற்ற கடனில் 25 விழுக்காடு அல்லது ரூ.20,000 இதில் எது அதிகமோ அதைத் தள்ளுபடியாகப் பெறுவார்கள் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் வசித்தாலும் அல்லது மற்ற இடங்களில் வசித்தாலும் முழுமையான கடன் தள்ளுபடி பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் உள்பட 4 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். வேளாண் கடன் தள்ளுபடி இலக்கு, தணிக்கை செய்யப்படாத மதிப்பீட்டின்படி 60,000 கோடியில் இருந்து 71,600 கோடியாக அதிகரிக்கும்.
இதுகுறித்து நிதியமைச்சர் சிதம்பரம் கூறுகையில், "இப்புதிய திட்டத்தினால் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் முழுக்கடன் தள்ளுபடி பெறுவதுடன், முதல் 65 விழுக்காடு பெரிய விவசாயிகளும் பயன்பெறுகின்றனர். இதனால் ஒட்டுமொத்த மதிப்பீடு அதிகரித்து விட்டது" என்றார்.
இதுபற்றிய அறிவிப்பு எல்லா வங்கிகளுக்கும் அனுப்பப்படும் என்றும், இந்நடவடிக்கைகள் முடிந்து திட்டம் முழுமையாக அமலாக ஒரு மாதமாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த மாற்றியமைக்கப்பட்ட வேளாண் கடன் தள்ளுபடித் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ராகுல் காந்தி, வறண்ட நிலப்பகுதியில் அதிகமான நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வேளாண் கடன் தள்ளுபடித் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.