''இந்தியர்களின் தனி நபர் உணவு அளவு அமெரிக்க தனி நபர் உணவு அளவைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது'' என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உணவு தானியங்களின் பற்றாக்குறை மற்றும் விலை ஏற்றத்திற்கு இந்தியர்களின் அதிகரித்துள்ள உணவுப் பழக்கவழக்கமே காரணம் என்று கூறிய கருத்திற்கு பதிலளித்த ஷரத் பவார் இவ்வாறு கூறியுள்ளார்.
"உணவு மற்றும் வேளாண் அமைப்பின் உலக உணவு தானிய சந்தை அறிக்கை நிலவரப்படி 2007- 08ஆம் ஆண்டில் அமெரிக்காவின் உணவு தானிய நுகர்வு 11.81 விழுக்காடு அதிகரித்து 310.4 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.
மாறாக இந்தியாவில் உணவுத் தானிய நுகர்வு இதே காலக் கட்டத்தில் வெறும் 2.17 விழுக்காடே அதிகரித்து 197.3 மில்லியன் டன்களாக உள்ளது.
அமெரிக்காவில் கோதுமை பயிர் நிலங்கள் டீசல் உற்பத்திகான தானியக் களமாக மாற்றப்பட்டுள்ளதால் உலக அளவில் கோதுமைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் விவசாய நிலங்கள் ஒரு போதும் டீசல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதில்லை".