மே. வங்கத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து முழு அடைப்பு : இயல்புநிலை பாதிப்பு!

திங்கள், 21 ஏப்ரல் 2008 (13:07 IST)
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தவறிவிட்டாதாக குற்றம்சாட்டி மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முழு அடைப்பு நடத்தியதால் மேற்கு வங்க மாநிலத்தில் இயல்பு நிலை பாதிக்கப்ட்டது.

webdunia photoWD
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்திய சோஷலிச ஐக்கிய மையத்தைச் (எஸ்.யூ.சி.ஐ.) சேர்ந்த தொண்டர்கள் பல்வேறு இடங்களில் ரயில் பாதையில் மறியல் செய்தனர். இதனால் ஹவ்ரா, சியால்டக் ஆகிய கோட்டங்களில் நீண்ட தூர ரயில், புற நகர் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.

தனியார் பேருந்துகள், கார்கள், டாக்சிகளும் ஓடவில்லை. இதனால் எப்போதும் போக்குவரத்து நெருக்கடியாக இருக்கும் கொல்கட்டா சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.

அதே நேரத்தில் சுரங்கபாதை ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை. நேதாஜி சுவாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்களின் சேவையும், இங்கிருந்து புறப்படும் விமான சேவையும் வழக்கம் போல் நடைபெறுகின்றது. விமான பயணிகள் முழு அடைப்பு தொடங்குவதற்கு முன்னரே விமான நிலையத்திற்கு வந்து குவிந்து விட்டனர். இதனால் கூட்டம் நிரம்பி வழிவதாக விமான நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.

கொல்கட்டாவில் கடைகள், தினசரி சந்தைகள், தனியார் அலுவலகங்கள், வங்கி, நிதி நிறுவனங்கள் மூடிக் கிடந்தன. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன.

இதுவரை விரும்பதகாத சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று சட்டம்-ஒழுங்கு ஐ.ஜி ராஜ் கனோஜியா தெரிவித்தார்.

webdunia photoWD
உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் தவறிவிட்டன என்று மம்தா பாணர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், இந்திய சோஷலிச ஐக்கிய மையமும் (எஸ்.யூ.சி.ஐ) இணைந்து கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

கடை அடைப்பு போராட்டத்தை பற்றி மம்தா பானர்ஜி கூறுகையில், “நாங்கள் விலை உயர்வு குறித்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்த போதிலும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டன. மத்திய அரசு விலை உயர்வால் மக்கள் படும் கஷ்டங்களை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதனால் மாநிலம் தழுவிய கடை அடைப்பு போராட்டம் நடத்துகின்றோம். விலை உயர்வால் பொதுமக்களுக்கு கடுமையான சுமை ஏற்பட்டுள்ள நிலையிலும், இதை பற்றி கவலைப்படாமல் இருக்கின்றனர். பணவீக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசும் கவலைப்படாமல் இருக்கின்றத” என்று குற்றம் சாட்டினார்.