எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது 1,300 வழக்குகள்!

திங்கள், 10 மார்ச் 2008 (20:32 IST)
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் 1,300 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்டம், நீதி அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 மார்ச் 31-ம் தேதி வரையில் எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியோருக்கு எதிராக நாடு முழுவதிலும் பதிவாகியுள்ள வழக்குகள் குறித்த தகவல்களை நாடாளுமன்ற குழு தயாரித்துள்ளது. இதனை, அமைச்சர் பரத்வாஜ் நாடாளுமன்றத்தில் இன்று அளித்தார். அதன்படி தற்போது பொறுப்பில் உள்ள எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது நாடு முழுவதிலும் 1,300 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், மத்திய புலனாய்வுக் கழகத்தின் வசம் 65 வழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களிடம் கேட்கப்பட்ட தகவல்களை நாடாளுமன்ற குழுவிடம் அளித்துள்ளன. அதன் அடிப்படையில், இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்