ஆபத்தான ரயில்வே பட்ஜெட்: இடதுசாரிகள்!
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (19:32 IST)
ரயில்வே பட்ஜெட்டில் தனியார் மயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதன் மூலம், ரயில்வே துறையை ஆபத்தான பாதைக்கு மத்திய அமைச்சர் லாலு பிரசாத் இட்டுச் செல்கிறார் என்று இடதுசாரிகள் குற்றம்சாற்றி உள்ளனர்.
அதேநேரத்தில் சரக்குக் கட்டண விகிதம், பயணிகள் கட்டணச் சலுகைகள் பற்றிய அறிவிப்புகளை அவர்கள் வரவேற்றனர்.
ரயில்வே பட்ஜெட் குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூத்த தலைவர்கள், "ரயில்வே துறையில் உபரியாக ரூ.25,000 கோடி உள்ளதாக அறிவித்த லாலு பிரசாத், இத்துறையில் காலியாக உள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்புவது குறித்து ஏன் எதுவும் தெரிவிக்கவில்லை" என்று கேள்வி எழுப்பினர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஏ.பி.பரதன், ஷாமிம் ஃபைஸி ஆகியோர் பேசுகையில், ரயில்வேயில் உள்ள பல்வேறு பிரிவுகள் தொடர்ந்து தனியார்மயம் ஆக்கப்படுவதால் உருவாகியுள்ள முறைகேடுகள், வசதிக் குறைவுகள் போன்றவற்றை லாலு பிரசாத் முற்றிலும் புறக்கணித்து விட்டதாகக் கூறினர்.
"கட்டணத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தனியார் மயத்தினால் உயரவுள்ள கட்டணங்களால் ஈடுகட்டப்பட்டு விடும்.
இதேபோலக் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறுத்தப்பட்ட பல்வேறு சலுகைகளைத் திரும்ப வழங்குவது பற்றியும் பயணிகளுக்கு எந்த வாக்குறுதியும் வழங்கப்படவில்லை" என்றார் ஏ.பி.பரதன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிருந்தா காரத் கூறுகையில், ரயில்வே பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள தனியார்மய அறிவிப்புகள் துரதிர்ஷ்டமானது என்றார்.
"உபரியாக ரூ.25,000 கோடி உள்ளது என்று தெரிவித்த லாலு பிரசாத், அந்த நிதியை அடுத்தகட்ட மேம்பாட்டு நடவடிக்கைகளிலும், ரயில்வே துறையை விரிவாக்கவும் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம், இந்த நிதியை சாதாரண மக்களுக்கு திரும்பக் கொடுக்க வேண்டும்" என்றார் பிருந்தா காரத்.