லாலுவுக்கு எதிராகக் கூச்சலிட்ட காங்கிரசார்!
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (17:59 IST)
மக்களவையில் இன்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது அதில் தங்கள் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி காங்கிரஸ் உறுப்பினர்களே கூச்சலிட்டதால் அவையில் பரபரப்பு நிலவியது.
அமைச்சர் லாலு பிரசாத் ரயில்வே பட்ஜெட்டைப் படிக்கத் துவங்கியவுடன், பா.ஜ.க., இடதுசாரிகள், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பட்ஜெட்டில் தங்கள் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகக் கூறி கூச்சலிட்டவாறும் வெளிநடப்பு செய்தவாறும் இருந்தனர்.
அவர்களுடன் இணைந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும், தங்கள் மாநிலங்கள் அல்லது தொகுதிகளின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகக் கூறி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி எழுந்து சென்று காங்கிரஸ் உறுப்பினர்களை அமைதிப்படுத்தி அமர வைத்தார்.
மற்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டுக் குழப்பம் ஏற்படுத்தியதால் ஆத்திரமடைந்த அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, அமைச்சர் லாலு பிரசாத்தை நோக்கி பட்ஜெட் வாசிப்பை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
இருந்தாலும், லாலு பிரசாத் கூச்சலைக் கண்டுகொள்ளாமல் தனது வாசிப்பைத் தொடர்ந்தார். இடையூறுகளுக்கு இடையில் பலமுறை தனது உரையை நிறுத்தி நிறுத்தித் தொடர்ந்த லாலு இறுதியில் பட்ஜெட்டை மேசை மீது வைத்துவிட்டார்.