மேற்கு மராட்டியத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த விவசாயிகள் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், "நாட்டின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் பெரும் கடன் சுமையால் அவதியுற்று வருகின்றனர். அவர்களின் துயர்துடைக்க மத்திய நிதி அமைச்சகம் விரைவில் நிவாரண உதவிகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளது' என்றார்.
மேலும், "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளது. அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண் திட்டத்துக்காக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் விதர்பா பகுதி விவசாயிகளுக்காக சிறப்பு நிவாரணத் திட்டம் ஒன்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கரும்புக்கு சரியான விலை கிடைக்காததால் இன்னலுக்கு ஆளாகியுள்ள கரும்பு விவசாயிகளின் துயர்துடைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கரும்பு ஆலைகளுக்கு நிவாரண திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது" என்றார் பிரதமர்.