இதுகுறித்து டெல்லியில் நடந்த பா.ஜ.க செயற்குழுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், "அத்வானியை பிரதமர் வேட்பாளராக நாம் அறிவித்ததை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக் கொண்டன. இந்த ஒற்றுமை நமக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று நான் நம்புகிறேன். நமது மூத்த தலைவர் வாஜ்பாய் அத்வானியை ஆசிர்வதித்து பொறுப்புகளை அவர் கையில் ஒப்படைத்துள்ளார். வாஜ்பாயின் நிறைவேறாத கனவுகளை நனவாக்க அத்வானியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பொன்னான வாய்ப்பை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
'ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஐக்கியமும் (ஒற்றுமை) இல்லை, முற்போக்கும் இல்லை. அண்மையில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளைப் பார்க்கையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது' என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், 'குஜராத், இமாசலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் நமக்கு கிடைத்த வெற்றி மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு உந்து சக்தியாக இருக்கும்' என்றார்.
'காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பயங்கரவாதம் பரவி வருகிறது. விவசாயிகள் நிலை பரிதாபகரமாக உள்ளது. ஆனால் காங்கிரசும் இடதுசாரி கட்சிகளும் பொய்ச் சண்டை போட்டு மக்களை முட்டாளாக்கி வருகின்றனர். பத்திரிக்கைகளில் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளே ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கிக் கொள்கின்றனர்' என்றும் அவர் குற்றம் சாற்றினார்.