கல்விக்கு ரூ.3 லட்சம் கோடி : தேசிய அறிவுக் குழு பரிந்துரை!
11வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் கல்வித் துறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்க, தேசிய அறிவுக் குழு பிரதமரிடம் பரிந்துரைத்துள்ளது.
தேசிய அறிவுக் குழுத் தலைவர் சாம் பிட்ரோடா, தமது குழுவின் இரண்டாவது ஆண்டறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.முன்னதாக நேற்று இந்த அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சாம் பிட்ரோடா குழு சமர்ப்பித்துள்ளது. இக்குழுவில் முனைவர் அசோக் கங்குலி, ஜெயாட்டிகோஷ், தீபக் நய்யார், நந்தன் நீலிக்கனி, சுஜாதா இராமதுரை ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழு பரிந்துறையில் பல்கலைத் தளம், சுகாதாரம் சார்ந்த தகவல் தொடர்பு, சட்டக் கல்வி, மருத்துவக் கல்வி, மேலாண்மையியல், திறந்த மற்றும் தொலைத் தூர கல்வி, வெளிப்படையான கல்வி ஆதாரங்கள், புதிய கண்டபிடிப்புகள், அறிவுசார் சொத்து உரிமை, சட்ட வரையறைக்குட்பட்ட பொது ஆராய்ச்சி நிதி, தொன்று தொட்டு நடைமுறையில் உள்ள சுகாதார முறைகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இக்குழு சமர்ப்பித்துள்ள இரண்டாவது ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு அறிக்கையிலும் 20 தலைப்புகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய 160 உறுதியான நடவடிக்கைகள் பரிந்துறைக்கப் பட்டுள்ளது. பெரும்பாலான இக்குழுவின் பரிந்துரைகள் 11 -வது திட்டக்கால செயல்பாட்டில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. மேலும் அதிக நிதி ஒதுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விரைவான, எதிர்நோக்கும் வளர்ச்சியை அடைய கல்வி முக்கியமான கருவி என்பதால் 11 -வது திட்டக்காலத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கல்வியின் விரிவாக்கம், திறன், சமநிலை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள பரிந்துரைக்கப் பட்ட தொகை, கடந்த திட்டக் காலத்தில் கல்விக்கு ஒதுக்கிய அளவு நிதியைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகம். அதாவது மூன்று லட்சம் கோடியாகும். மொத்த திட்டச் செலவில் கல்விக்கான ஒதுக்கீடு 7.7 -லிருந்து 20 விழுக்காடாக உயர்த்தி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.