காஷ்மீர்: பனிச்சரிவில் புதைந்து ராணுவத்தினர் உட்பட 20 பேர் பலி!
வியாழன், 10 ஜனவரி 2008 (16:56 IST)
ஜம்மு- காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ள மலைப் பகுதிகளில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவத்தினர், சுமை தூக்கிகள் உட்பட 20 பேர் பலியாயினர்.
குப்வாரா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக பொழிந்து வரும் பனி மழையால் 6 அடி உயரத்திற்குப் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் பல்வேறு முக்கியச் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் மலைச் சரிவுகளில் உள்ள பதுங்கு குழிகளில் தங்கிப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினருக்கு கழுதைகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று மதியம் யூரியில் உள்ள மலைப் பகுதியில் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 ராணுவத்தினரும், 8 சுமை தூக்கும் தொழிலாளர்களும் பனியில் புதைந்து பலியாயினர். வெகுநேரம் நீடித்த தேடுதலுக்குப் பிறகு 2 சுமை தூக்கிகள் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டனர்.
இதையடுத்து, இன்று அதிகாலை முதல் மேலும் பல்வேறு இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 7 ராணுவத்தினர் பணியில் புதைந்திருக்கலாம் என்ற கருதப்படுகிறது. அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடுமையான பனிப்பொழிவினால், பனியில் புதைந்து கிடக்கும் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்தனர். இருந்தாலும், இன்று மாலைக்குள் உடல்களை மீட்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.