மணிப்பூரில் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 4 பெண்கள் உட்பட 7 பேர் பலியாயினர். மேலும் 30 பேர் காயமடைந்தனர்.
இம்பால் மாவட்டத்தில் உள்ள போரபி பகுதியில் பயங்கரவாதிகள் சாலையில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை பயணிகள் பேருந்து ஒன்று கடந்த போது குண்டு வெடித்ததாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை 5.45 மணிக்கு நடந்த இந்த குண்டுவெடிப்பில், நிகழ்விடத்திலேயே 3 பேர் பலியானதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் பலியாயினர் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
காயமடைந்த 30 பேருக்கும் ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.