மக்களவைக்கான இடைத்தேர்தலை சந்திக்க எல்லாக் கட்சிகளும் தயார் நிலையில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அணுசக்தி ஒப்பந்தத்தை முற்றிலும் கைவிட வேண்டும். இல்லை என்றால் மக்களவைக்கு இடைத் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகும். இடைத் தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகவே உள்ளன என்றார்.
நாடாளுமன்றத்தில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதம் நடத்தியப் போது பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால், இதை நடைமுறைப்படுத்த மேற்கொள்ளப்பட்டு உள்ள முயற்சிகளை நிறுத்த வேண்டும். இந்த ஒப்பந்தத்தால் தேவையற்ற சிக்கல்கள் உருவாகும்.
வெளியுறவு கொள்கைகள் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி -இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் போது சில விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்கும். குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உறுதி அளித்துள்ளவாறு மத்திய அரசு நடந்துகொள்ள வேண்டும் என்றார் காரத்.