உ.பி.யில் கடும் குளிருக்கு 10 பேர் பலி!
Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (12:58 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் நிலவிவரும் கடுமையான குளிருக்கு கடந்த இரண்டு நாட்களில் 8 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஜான்பூரில் 5 பேரும், மதுராவில் 2 பேரும், லக்னோ, தியோரியா, பாராபன்கி பகுதிகளில் தலா ஒருவரும் குளிர் தாங்காமல் இறந்துள்ளனர்.
இந்த ஆண்டு குளிர்காலத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக வடமாநிலங்களை பாதித்துள்ளது. மலைப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. பல முக்கிய சாலைகளில் அதிகபட்ச பார்வைத் தூரம் 600 மீட்டராக நீடிக்கிறது.
தலைநகர் டெல்லியில் குறைந்தபட்சமாக 7 டிகிரியும், அதிகபட்சமாக 12.1 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலை நாளை காலை வரை தொடரும் என்றும், மூடுபனி கொட்டும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நுழைவாயில் எனப்படும் ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜவஹர் சுரங்கப் பாதையின் அருகில் 18 செ.மீ. உயரத்திற்கு பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் தவித்தன.
இதையடுத்து 300 கி.மீ நீளமுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலையின் இரண்டு எல்லைகளிலும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட எல்லா வாகனங்களும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதவிர பஹால்கம், கோகெர்நாக், வெரிநாக், தக்சம், ஹரபால், குல்காம், புல்வாமா, அனந்த்நாக் உள்ளிட்ட பல்வேறு மலைப் பகுதிகள் பனியால் மூடப்பட்டுள்ளன.
மூடுபனி கொட்டினாலும் விமானப் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
கடந்த சில நாட்களாக உத்தரபிரதேசத்தில் வெப்பநிலை 21 டிகிரிக்கு குறைவாகவே உள்ளது. இது மேலும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.