பயங்கரவாத குழுக்களுடன் பேச்சு நடத்தத் தயார்: மத்திய அரசு
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (15:14 IST)
'நமது நாட்டில் வன்முறைகளில் ஈடுபடும் பயங்கரவாதக் குழுக்களுடன் பேச்சு நடத்துவதற்கு தயாராக உள்ளோம்' என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், ''மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையானது அரசியல், பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய முக்கிய விடயங்களை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது, எனவே பயங்கரவாதக் குழுக்களுடன் பேச்சு நடத்த அரசு தயாராக உள்ளது.'' என்று கூறியுள்ளார்.
''கடந்த சில ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால் வன்முறைச் செயல்கள் குறைந்துள்ளன. அதே நேரத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்துள்ளன.
நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்துள்ள பகுதிகளில் கடந்த ஆண்டு இதே நேரத்தில் என்ன நிலை இருந்ததோ, அதுவே இப்போதும் உள்ளது'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
''எல்லைப் புறங்களில் ஊடுருவல்களைத் தடுக்க அதிக எண்ணிக்கையிலான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதச் செயல்களினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், மாநிலக் காவலர்களுக்கு உதவும் வகையில் மத்தியப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எல்லா வகையான முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் உளவுத்துறை உதவியுடன் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.'' என்று அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறினார்.