உத்தரபிரதேசத்தில் குண்டுவெடிப்பு: தீவிரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு!
Webdunia
சனி, 24 நவம்பர் 2007 (17:19 IST)
உத்தர பிரதேச தலைநகர் லக்னோ, வாரணாசி, ஃபைசாபாத் ஆகிய 3 முக்கிய நகரங்களில் நீதிமன்றங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலுக்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படும் 4 தீவிரவாதிகளின் கணினி வரைபடங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
குண்டுவெடிப்புகளைக் கண்ணால் கண்ட சாட்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்தப் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் முக்கியப் பகுதிகளுக்கு இப்படங்களை அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உத்தர பிரதேசத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட சைக்கிள்கள் வாங்கிய கடைகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கடைகள் ஃபைசாபாத், வாரணாசி, லக்னோ ஆகிய நகரங்களிலேயே உள்ளன.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் தெரிவித்த காவல்துறைத் தலைவர் அரவிந்த் ஜெய்ன்,''குறிப்பிட்ட கடைகளில் சைக்கிள்களை வாங்கியவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றோம். கடைக்காரர்கள் தந்துள்ள தகவல்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்'' என்றார்.
குண்டுவெடிப்புகளுக்கு 6 சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில், வாரணாசியிலும் ஃபைசாபாத்திலும் பயன்படுத்தப்பட்ட சைக்கிள்கள் புதியவை. லக்னோவில் பயன்படுத்தப்பட்ட சைக்கிள்களில் ஒன்று பழையது, மற்றொன்று புதியது. புதிய சைக்கிள் வெடிக்கவில்லை.
குண்டுவெடிப்புகளுக்கு முன்பு அது தொடர்பாக செய்தி ஊடகங்களின் அலுவலகங்களுக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சல் டெல்லியில் லக்ஷ்மி நகர் பகுதியில் உள்ள இணையதள மையத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ராஜதானி கேஃப் எனப்படும் அந்த மையத்தின் உரிமையாளர் உட்பட இருவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 22ஆம் தேதி இந்த மின்னஞ்சல் செய்தி உருவாக்கப்பட்டுள்ளது.அதை அனுப்பியவர் தன்னுடைய முகவரி உள்ளிட்ட விவரங்களை கொடுக்கவில்லை.