குண்டுவெடிப்பை கண்டித்து உ.பி.யில் முழு அடைப்பு!
Webdunia
சனி, 24 நவம்பர் 2007 (12:40 IST)
உத்தரபிரதேச தலைநகர் லக்னோ, வாரணாசி, ஃபைசாபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்து பா.ஜ.க., வி.ஹெச்.பி அமைப்புகளின் சார்பில் இன்று மாநில அளவிலான முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது.
குண்டுவெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதற்கிடையில் குண்டுவெடிப்புகளைக் கண்டித்து சமாஜ்வாடி கட்சியின் தொண்டர்கள் இன்று அதிகாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் அலகாபாத் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஃபைசாபாத்தில் 4 பேர் கொண்ட உயர்மட்டக் குழு தனது விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது. குண்டு வெடிப்புகளுக்கு பின்னால் உள்ளவர்களைக் கண்டறிவதற்குத் தேவையான நேரடிச் சாட்சிகளை அவர்கள் சேகரித்து வருகின்றனர்.
இந்தியன் முஜாகுதீன் என்ற அமைப்பு குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் கூறியுள்ளன.
அந்த அமைப்பினர் அனுப்பியுள்ள மின்னஞ்சல் புதுடெல்லியில் உள்ள இணையதள மையத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்றிரவு, குண்டுவெடிப்புகளைக் கண்ணால் கண்ட சாட்சிகள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் 3 குற்றவாளிகளின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து உ.பி. காவல்துறை தலைவர் விக்ரம் சிங்கிடம் கேட்டதற்கு, இந்த வழக்கை சிறப்பு அதிரடிப்படையினர் விசாரித்து வருகின்றனர். நாங்கள் எதையும் விட்டுவிட மாட்டோம். விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கைது செய்துவிடுவோம் என்றார்.