சர்வதேச சுற்றுலா அமைப்பின் செயற்குழுத் தலைவர் பதவியை இந்தியா கைப்பற்றுமா?
Webdunia
சனி, 24 நவம்பர் 2007 (12:22 IST)
ஐக்கிய நாடுகள் பொது சபையின் அங்கமான சர்வதேச சுற்றுலா அமைப்பின் 17-வது அமர்வில் பங்கேற்பதற்காக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி இன்று கொலம்பியா புறப்பட்டுச் செல்கிறார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள செயற்குழுத் தலைவர் தேர்தலில், தலைவர் பதவிக்கு இந்தியா போட்டியிடுகிறது.
மூன்று நாள் பயணமாக கொலம்பியா செல்லும் அம்பிகா சோனி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அங்கமான சர்வதேச சுற்றுலா அமைப்பின் அமைச்சர்கள் கூட்டத்திலும், சுற்றுலா தொடர்பான பொது அமர்விலும் உரையாற்றுகிறார்.
அதனைத் தொடர்ந்து துருக்கி, எகிப்து, தென் ஆப்பிரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா துறை அமைச்சர்களுடன் அம்பிகா சோனி பேச்சு நடத்துகிறார். டில்லி திரும்பும் வழியில் மியாமியில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக இந்தியாவை உருவாக்குவது தொடர்பாக சுற்றுலாவை ஏற்பாடு செய்து தருபவர்களுடன் பேச்சு நடத்தவும் உள்ளார்.
சர்வதேச சுற்றுலா அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு அங்கமாகும். சுற்றுலாத் துறையை பொறுத்த மட்டில் இது முன்னணி அமைப்பாகும். சுற்றுலா கொள்கை தொடர்பான பிரச்சனைகள், சுற்றுலா மூலங்களை கண்டறிவது, யதார்த்த நடைமுறைகளை ஒருங்கிணைக்கும் பணி ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது.
இந்த அமைப்பில் கடந்த 2006 -ஆம் ஆண்டு 150 நாடுகளும், தனியார் துறையினர், கல்வி நிறுவனங்கள், சுற்றுலா கூட்டமைப்புகள், உள்ளூர் சுற்றுலா நிர்வாகிகள் என அங்கீகரிக்கப்பட்ட 300 உறுப்பினர்களும் இடம் பெற்றிருந்தனர்.
தற்போது இதில் சேர மாண்டினிஃகுரோ, தஜிகிஸ்த்தான், புரூனே ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் பொது சபையின் அங்கமான சர்வதேச சுற்றுலா அமைப்பின் 17-வது கூட்டத்திற்கு பின்னர் உறுப்பினர்களின் எண்ணிக்கை 153 ஆக உயரும் என்று கூறப்படுகிறது.
சர்வதேச சுற்றுலா அமைப்பின் செயல்பாடுகளை அதாவது நிதிநிலை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிர்வகிக்கும் அமைப்புத்தான் செயற்குழு என்று அழைக்கப்படுகிறது. இதன் கூட்டம் ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும்.
சர்வதேச சுற்றுலா அமைப்பில் அங்கம் வகிக்கும் 150 நாடுகளின் உறுப்பினர்களில் 5 பேருக்கு ஒருவர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார். இந்த அமைப்பிற்கு புரவலராக உள்ள ஸ்பெயின் மட்டும் செயற்குழுவில் நிரந்தர உறுப்பினராக உள்ளது. துனிஸியா இக்குழுவின் தலைவராகவும், அர்ஜென்டினா-ஹங்கேரி ஆகிய நாடுகள் துணைத் தலைவராகவும் உள்ளன.
கடந்த 2005 ஆம் ஆண்டு செனிகலீல் உள்ள டக்கரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொது சபையின் சர்வதேச சுற்றுலா அமைப்பின் 16-வது அமர்வில் செயற்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினராக இருந்து வருகிறது. புவியியல் அடிப்படையில் சுழற்சி முறையில் ஒவ்வொரு கண்டங்களைச் சேர்ந்த நாடுகளும் இப் பதவிக்கு போட்டியிடுகின்றன.
அந்த அடிப்படையில் இந்த முறை தெற்கு ஆசிய நாடுகளில் இருந்து ஒரு நாடு போட்டியிட வேண்டும். இந்தியா இந்த ஆண்டு செயற்குழுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறது. செயற்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புதிய தலைவர் வரும் 29 -ஆம் தேதி நடைபெறவுள்ள 82 -வது செயற்குழுக் கூட்டத்தின் போது பொறுப்பேற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது.