நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டன!
வியாழன், 15 நவம்பர் 2007 (16:00 IST)
நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாக இருந்து மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியப் பிறகு இரு அவைகளும் இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மக்களவை தொடங்கியவுடன் மறைந்த உறுப்பினர்களின் இரங்கல் தீர்மானத்தை அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி வாசித்தார்.
முதலில் பதவியிலிருக்கும்போது மறைந்த உறுப்பினர் விஜயகுமார் கண்டெல்வாலுக்கும், பின்னர் எல்.எம்.சிங்வி, மன்ஜய் லால், யஷ்வந்த் பரோலி, லால் ராம் கென் ஆகியோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பழங்குடியினருக்கு கல்வி, மருத்துவம் போன்ற வசதிகளைப் பெற்றுத் தருவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் அதிகமான முயற்சிகளை எடுத்தவர் கண்டெல்வால்.
பா.ஜ.க.வைச் சேர்ந்த இவர் மத்தியபிரதேச மாநிலம் பெட்டுல் தொகுதியில் இருந்து மக்களைக்குத் தேர்வு செய்யப்பட்டார். இதுவரை 4 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இவர் தனது 71ஆவது வயதில் நாக்பூரில் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி மறைந்தார்.
புகழ்பெற்ற சட்டவல்லுநரான எல்.எம். சிங்வி சிறந்த மனித உரிமைக் காப்பாளராகச் செயல்பட்டுள்ளார். ஆஃப்ரிக்க நாடுகள், ஆசிய நாடுகள் பலவற்றில் அரசியலமைப்புச் சட்டங்களை உருவாக்குவதற்குத் துணைபுரிந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட சிங்வி, 1998 முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1991 முதல் 1997 வரை பிரிட்டனுக்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் தனது 76ஆவது வயதில் புதுடெல்லியில் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மறைந்தார்.
மற்றவர்களில் மன்ஞய் லால், பீகார் மாநிலம் சமாஸ்திபூரிலும், யஷ்வந்த் பரோலி, மராட்டிய மாநிலம் ஜல்கானிலும், லால் ராம் கென், ராஜஸ்தான் மாநிலம் பயானாவிலும் இருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
முன்னதாக கோவா யூனியன் பிரதேசத்தில் மர்மகோவா தொகுதி இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் உறுப்பினர் ஃபிரான்சிஸ்கோ சர்தின்ஹா மக்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு அவைச் செயலர் பி.டி.டி. ஆச்சாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஃபிரான்சிஸ்கோ சர்தின்ஹா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் வில்ஃப்ரெட் மெஸ்குட்டாவை விட 40,000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். இந்நிகழ்ச்சிகளை அடுத்து மக்களை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை
மாநிலங்களை தொடங்கியவுடன் மறைந்த உறுப்பினர்கள் ஜனா கிருஷ்ணமூர்த்தி, எல்.எம். சிங்வி, எஸ்.ஆர்.பொம்மை, ஜகதீஷ் பிரஸ்தா மன்சூர் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்களை அவைத் தலைவர் ஹமீது அன்சாரி வாசித்தார்.
முன்னதாக மாநிலங்களவையின் புதிய செயலாளர் விவேக் குமார் அக்னிஹோத்ரியை அவைத் தலைவர் ஹமீது அன்சாரி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.