அணு சக்தி ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்: பிரகாஷ் காரத்!
வியாழன், 15 நவம்பர் 2007 (15:25 IST)
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வலியுறுத்தியுள்ளார்.
இந்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ் காரத்திடம், அணுசக்தி ஒப்பந்தத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைஎடுப்பதற்கு இடதுசாரிக் கட்சிகள் அனுமதி அளிக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த காரத், ''நாளை நடைபெறவுள்ள ஐ.மு.கூட்டணி - இடதுசாரிகள் உயர்மட்டக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்துதான், சர்வதேச அணுசக்தி முகமையை அணுகுவதற்கு மத்திய அரசிற்கு அனுமதி அளிக்கப்படுமா என்பது தெரியும்'' என்றார்.
''உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக தங்களின் நிலையைத் தெளிவாக விளக்குமாறு மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துவோம். அதன்பிறகுதான் எந்த முடிவானாலும் எடுக்கமுடியும்.
நடைபெறுகின்ற நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் அணுசக்தி ஒப்பந்தம் பற்றி விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம். நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒப்பந்தத்திற்கு எதிராக உள்ளனர்.
எனவே, மத்திய அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு நாடாளுமன்றத்தின் கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்'' என்றார் காரத்.