மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் இன்று காலை பயங்கர குண்டு ஒன்று வெடித்ததில் 3 பேர் உடல் சிதறி பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
தொழிற்சாலைகளுக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து வரும் இயக்கத்தின் சார்பில் நந்திகிராமில் இன்று பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கெஜூரி என்ற இடத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே இன்று காலை பயங்கர குண்டு ஒன்று வெடித்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர்.
தொழிற்சாலைகளுக்கு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து வரும் பூமி பாதுகாப்பு இயக்கம் தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாற்றியுள்ளது. பூமி பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது குண்டுகளை வீசியதாக அக்கட்சி கூறியுள்ளது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அந்த இயக்கம் மறுத்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அது வெடித்ததாக பூமி பாதுகாப்பு இயக்கம் குற்றம்சாற்றியுள்ளது.
நந்திகிராமில் நேற்று நடைபெற்ற மோதலின் போது பூமி பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்றைய பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நந்திகிராமில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.