குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச சட்டப்பேரவைகளுக்கு டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!
இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி புதுடெல்லியில் இன்று வெளியிட்டார்.
இதன்படி வரும் டிசம்பர் 11 மற்றும் 16 ஆகிய தேதிகளில் குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதேபோல் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் டிசம்பர் 14 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு டிசம்பர் 28ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்த இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை நெறிமுறை விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
குஜராத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 122 இடங்கள் பாஜக வசம் உள்ளது.
இமாச்சல் பிரதேச மாநிலத்தில் வீர்பத்ரசிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 62 இடங்களில் காங்கிரஸ் 42 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.