இந்திய நலனிற்கு எதிரானது அணு ஒப்பந்தம் : சோனியாவிற்கு இடதுசாரிகள் பதிலடி!

Webdunia

திங்கள், 8 அக்டோபர் 2007 (14:18 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் நாட்டின் நலனிற்கு எதிரானவர்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியதற்கு பதிலளித்துள்ள இடதுசாரிகள், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு, "இந்திய நலனிற்கு முற்றிலும் எதிரானது" என்று கூறியுள்ளனர்!

ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் 1,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிப் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நமது நாட்டின் மேம்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் மின் உற்பத்தி அதிகரிப்பு அவசியமானது என்றும், அந்த அடிப்படையில்தான் அமெரிக்காவுடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது என்று கூறியது மட்டுமின்றி, அந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் "மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் எதிரிகள்" என்று வர்ணித்தார்.

சோனியா இவ்வாறு பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்து ஆட்சிக்கு ஆதரவளித்துவரும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் பிரகாஷ் காரத் (மார்க்சிஸ்ட்), ஏ.பி. பரதன் (இந்திய கம்யூனிஸ்ட்), அபனி ராய் (புரட்சி சோசலிஸ்ட்), தேவபிரதாப் விஸ்வாஸ் (ஃபார்வர்ட் பிளாக்) ஆகியோர் கையெழுத்திட்டு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

"அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்தியாவிற்கு எதிரானது. இந்த ஒப்பந்தம் அவசியம் என்று கூறுபவர்கள் அணு சக்தியின் வாயிலாக மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கும் தன்னிறைவு பெற்ற திறன் இந்தியாவிற்கு உள்ளது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அணு மின் சக்திக்காக நமது நாட்டின் முக்கிய நலன்களை அமெரிக்காவிடம் தாரைவார்க்கத் தேவையில்லை" என்று அந்த கூட்டறிக்கையில் கூறியுள்ளனர்.

அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பான முரண்பாடுகளுக்குத் தீர்வு காண ஐ.மு. - இடது கூட்டணிகளின் தலைவர்கள் கொண்ட ஆய்வுக் குழு நாளை கூடவுள்ள நிலையில், இன்று இடதுசாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்