42 வருடத்திற்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து லாரி மூலமாக உலர் திராட்சை, முலாம் பழம் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன.
இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே லாரி மூலமாக சரக்கு போக்குவரத்து (ஏற்றுமதி, இறக்குமதி) துவங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் அமைந்துள்ள வாகா எல்லை மூலமாக, இந்த சரக்கு போக்குவரத்துக்கு இரு நாடுகளும் அனுமதி அளித்தன.
இதன்படி கடந்த புதன்கிழமை இந்தியாவில் இருந்து தக்காளி பெட்டிகளுடன் 15 லாரிகள் வாகா எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குச் சென்றன. இதை பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பாகிஸ்தானில் இருந்து மூன்று லாரிகளில் உலர் திராட்சை உட்பட பல வகையான உலர் பழங்களும், முலாம் பழமும் வாகா எல்லையை கடந்து இந்தியாவிற்கு வந்தது. இந்த உலர் பழங்கள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தது. ஒவ்வொரு லாரியிலும் 500 பெட்டிகளில் உலர் பழங்கள் இருந்தன.
பாகிஸ்தான் சரக்கு லாரிகளை வாகா எல்லையில் பாகிஸ்தான் சுங்க இலாக உதவி ஆணையாளர் தகிர் அகமது தார், வாகா எல்லைச் சாவடி அதிகாரி சுஜ்ஜா கஜாமி, விங் கமான்டர் கர்னல் தரிக் ஜனுஜா ஆகியோர் உட்பட சுங்க அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பாகிஸ்தான் சுங்க இலாக உதவி ஆணையாளர் தகிர் அகமது தார் இந்த விழாவில் பேசம் போது, இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான சாலை வழி வர்த்தகத்தால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படும். இந்த சாலை வழி சரக்கு வர்த்தகத்தை துவக்குவது என ஆகஸ்ட் 20 ஆம் தேதி முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த பத்து நாட்களில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவைச் சேர்ந்த சரக்கு லாரிகள் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அக்டோபர் 1 ஆம் தேதி நுழைந்தன. இங்கு அமைக்கப்பட்டுள்ள சுங்கப் பரிசோதனை அலுவலகத்தை பிரதமர் செளகத் அஜிஜ், அன்றே தொடங்கி வைப்பதாக இருந்தது. அவரால் அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை.
அத்துடன் சுமை தூக்கும் தொழிலாளர்கள் (போர்ட்டர்கள்) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அன்றே இந்தியாவைச் சேர்ந்த லாரிகளை சுங்கப் பரிசோதனை முடித்து பாகிஸ்தானுக்குள் அனுமதிக்க முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு அனுமதிக்கப்பட்டது.
இப்பொழுது இந்தியாவைச் சேர்ந்த லாரிகள் சரக்குகளுடன் பாகிஸ்தானில் எந்த பகுதிக்கும் செல்லலாம். அதே போல் பாகிஸ்தானைச் சேர்நத லாரிகளும், இந்திய நகரங்களுக்கு செல்ல முடியும்.
இநத் லாரிகளை இயக்கும் ஓட்டுநர்களுக்கு பாஸ்போர்ட், விசா, சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. சுங்கச் சாவடியில் ஓட்டுநரின் பெயர், புகைப்படம், அடையாள அட்டை எண், ஓட்டுநர் உரிமத்தின் எண், முகவரி மற்றும் இதர முக்கியமான தகவல்கள் அடங்கிய அனுமதி அட்டையை, சுங்கத்துறை வழங்கும்.
இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த சரக்கு லாரிகள் வாகா எல்லையில் நிறுத்தப்படும். இதிலுள்ள சரக்கை கூலியாட்கள் (போர்ட்டர்) மூலம் பாகிஸ்தான் லாரியில் மாற்றப்படும். அதே போல் பாகிஸ்தானைச் சேர்ந்த லாரிகளில் உள்ள சரக்குகள் இந்திய லாரிக்கு மாற்றப்படும்.
இப்போது நேரடியாகவே லாரிகளில் சரக்கு கொண்டு செல்லாம் என்று அதமது தார் கூறினார்.