பாகிஸ்தான் உளவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை!
Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (12:12 IST)
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்திற்காகப் பணிபுரிந்த உளவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து புனே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த சயீத் அகமது என்ற முகமது தேசாய், கடந்த 1999ஆம் ஆண்டு ஜூன் மாதம் மிகமுக்கியமான இரகசியத் தகவல்களை ஐ.எஸ்.ஐக்குக் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
அவர் மீது ரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த புனே மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி யஷ்வந்த் சோர் தண்டனை விவரத்தை நேற்று அறிவித்தார்.
முகமது தேசாய் செய்துள்ள முக்கியமான குற்றங்களுக்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன என்றும் அவற்றை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
ரகசியக் காப்புச்சட்டத்தில் 7 ஆண்டுகளும், சதித்திட்டம் தீட்டியதற்காக 7 ஆண்டுகளும், போலி கடவுச் சீட்டு தயாரித்தவழக்கில் 3 ஆண்டுகளும், அயல்நாட்டுச் சட்டத்தில் மற்றொரு 3 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் ரூ.50,000 அபராதமும், அதைக்கட்டத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இருந்தாலும், முகமது தேசாய் ஏற்கெனவே 7 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டதால், அபராதத்தை மட்டும் கட்டிவிட்டு விரைவில் விடுதலையாவார் என்று தெரிகிறது.
முன்னதாக மும்பை சிறையில் அடைக்கப்பட்ட முகமது தேசாய், பின்னர் 2000ஆம் ஆண்டு எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.