டிசம்பர் 1ஆ‌ம் தேதி முதல் கேபிள் டி.வி.க்கு புதிய கட்டணம் அமல்: டிரா‌ய் அ‌றி‌வி‌ப்பு!

Webdunia

வெள்ளி, 5 அக்டோபர் 2007 (11:04 IST)
டிச‌ம்ப‌ர் 1ஆ‌ம் தே‌தி முத‌ல் கேபிள் டி.வி.க்கு புதிய கட்டண‌ம் அம‌ல்படு‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

கேபிள் டி.வி.க்கு சில இடங்களில் இஷ்டம் போல கட்டணத்தை கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வசூலித்து வருகின்றனர். இதை ஒழுங்குபடுத்த தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கோடிக்கணக்கான கேபிள் டி.வி. சந்தாதாரர்கள் பயன்படும் வகையில் கேபிள் டி.வி. கட்டண மாத வாடகை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற `ஏ' பிரிவு மெட்ரோ நகரங்களிலும், பெங்களூர், ஐதராபாத் போன்ற `ஏ1' நகரங்களிலும் 30 இலவச சேனல்கள் மற்றும் 20 கட்டண சேனல்களுக்கு வரியை தவிர்த்து ரூ.160 விதிக்கப்படுகிறது. கட்டண சேனல்கள் 30 வேண்டுமெனில் ரூ.200-ம், 45 வேண்டுமெனில் 235-ம், 45 கட்டண சேனல்களுக்கு அதிகமாக வேண்டுமெனில் ரூ.260-ம் வசூலிக்க வேண்டும்.

வெறும் 30 இலவச சேனல்கள் மட்டும் வேண்டுமெனில் வரியை தவிர்த்து ரூ.77 மட்டும் செலுத்தினால் போதும். இது அதிகபட்ச கட்டண தொகையாகும். இதற்கு கூடுதலாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வசூலிக்க கூடாது.

ஆமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, புனே, கான்பூர், நாக்பூர், அலகாபாத், ஆக்ரா, போபால், கோயம்பத்தூர், அமிர்தசரஸ், பாட்னா போன்ற `பி1` மற்றும் `பி2` நகரங்களில் ஏற்கனவே குறிப்பிட்டபடி கட்டணங்கள் முறையே ரூ.140, ரூ.170, ரூ.200, ரூ.220 வசூலிக்க வேண்டும். பிற நகரங்களில் கட்டணங்கள் முறையே ரூ.130, ரூ.160, ரூ.185, ரூ.200 வசூலிக்க வேண்டும்.

இந்த கட்டணம் டிசம்பர் 1ஆ‌ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவு சாதாரண கேபிள் சந்தாதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். குறிப்பிட்ட சேனல்கள் அளிக்கும் முறைக்கு (சி.எ.எஸ்) இது பொருந்தாது.

வெப்துனியாவைப் படிக்கவும்