அரசின் உழவர் விரோதக் கொள்கைகள் : பாஜக குற்றச்சாற்று!
Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (20:29 IST)
பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என்று பேசிவருகிற சூழுலில் உழவர் விரோதக் கொள்கைகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுள்ளது என்று பாஜக குற்றம்சாற்றியுள்ளது.
தெலுங்கானா பகுதி கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவளித்து புது டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் பாஜக சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, "பொருளாதார வளம் பெருகுகிறது என்றால், நாட்டில் நிறைய விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று அரசை நான் கேட்க விரும்புகிறேன்" என்றார்.
மேலும், "மத்திய அரசின் உழவர் விரோதக் கொள்கைகளால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆந்திரப்பிரதேச மாநிலம் தெலுங்கானா பகுதி கரும்பு விவசாயிகள் சிக்கல்களைப் பிரதமர் விரைவாகக் கவனிக்கவேண்டும். இது தொடர்பாக நான் அவருக்கும், வேளாண்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுத உள்ளேன்" என்றார்.
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், தங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு மறுவாழ்வு உதவிகளைச் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.