மதவாத சக்திகளின் அச்சுறுத்தல்களை மக்கள் சேவையால் ஒன்றிணைந்து முறியடிப்போம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான கருணாநிதியின் தலையைக் கொண்டு வந்தால் அதைச் செய்பவரின் எடைக்கு எடை தங்கம் தரப்படும் என்று பாஜகவைச் சேர்ந்த ராம்விலாஸ் வேதாந்தி என்ற சாமியார் ஒருவர் கூறியிருந்தார்.
இந்த சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பிரதமருக்கு மத்திய சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் பாலுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, "இப்படிப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு வளைந்துவிடக் கூடாது என்றும், ஒன்றிணைந்து மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் இப்படிப்பட்ட அச்சுறுத்தல்களை முறியடிப்போம்" என்று கூறியுள்ளார்.