ஹவாத் விரைவு ரயிலில் தீ : 5 பெட்டிகள் சாம்பல்: பயணிகள் தப்பினர்

Webdunia

திங்கள், 24 செப்டம்பர் 2007 (11:40 IST)
உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து மும்பைக்குச் சென்று கொண்டிருந்த ஹவாத் விரைவு ரயிலில் திடீரென தீ பற்றியதில் 5 பெட்டிகள் எரிந்து சாம்பலாயின. ஆனால் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

ஹவாத் விரைவு ரயில் இன்று காலை குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தைக் கடந்து கொண்டிருந்த போது, பயணிகள் பெட்டி ஒன்றில் லேசான தீ ஏற்பட்டுள்ளது. அது சிறிது நேரத்திலேயே மளமளவென்று பரவியது.

தீ பரவியதும் ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் இறங்கிக் கொண்டனர். உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. தீ மற்ற பெட்டிகளுக்கும் பரவியது. 5 பெட்டிகள் முழுமையாக எரிந்து நாசமடைந்தன.

தீயணைப்பு வண்டிகள் அவ்விடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தன. எரிந்து போன 5 பெட்டிகளும் கழற்றிவிடப்பட்டு, பயணிகள் அனைவருடனும் இன்று காலை 6 மணிக்கு மும்பை நோக்கி ரயில் புறப்பட்டுச் சென்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்