ஹைதராபாத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (19:40 IST)
அண்மையில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஹைதராபாத் நகரத்தில் மீண்டும் ஒரு தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற உள்ளதாக வந்த மர்மக் கடிதத்தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலக் காவல்துறைத் தலைவர் எம்ஏ.பாசித்திற்கு வந்துள்ள மர்மக் கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களின்போது 6 இடங்களில் தாக்குதல் நடத்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், மிகப்பெரிய அழிவை உருவாக்கத் தீவிரவாதிகள் விரும்புவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இக்காரியத்தைச் செய்யக்கூடிய முக்கியக் குற்றவாளிகள், "தந்தையும், மகனுமான ஜாகீர், ஜாகெத் ஆகிய இருவர்" என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி என்ற தீவிரவாத இயக்கத்துடன் அந்த இருவருக்கும் தொடர்புள்ளது. பொதுச் சொத்துக்களையும், அரச அலுவலகங்களையும் குறிவைத்துத் தாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்றும் அந்த மர்மக் கடிதத்தில் உள்ளது.
மேலும் தீவிரவாதிகள் பயன்படுத்தும் தொலைபேசி எண்ணும், காரின் எண்ணும் கூட அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.