சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றும்போது ராமர் பாலத்தை பாதுகாக்க வேண்டும். இடிக்கக் கூடாது என்று மத்திய மந்திரி லாலு பிரசாத் கூறி உள்ளார்.
டெல்லியில் ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான புதிய உணவகத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் கலந்து கொண்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ராமர் பாலம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றும் போது, ராமர் பாலத்தை பாதுகாக்க வேண்டும் என்றார்.
நமது பழங்கால நூல்களில் ராமர் பாலம் பற்றி குறிப்புகள் உள்ளன. ராவணனால் சிறை வைக்கப்பட்ட சீதா தேவியை மீட்க ராமர் இலங்கைக்கு பாலம் அமைத்தார் என்றும், ராவணனுடன் போர் புரிந்தார் என்றும் அந்த நூல்களில் கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில் ராமர் பாலம் இருப்பது நிரூபிக்கப்பட்டால், அது பாதுகாக்கப்பட வேண்டும். இடிக்கக் கூடாது என்று லாலு கூறினார்.
இந்தியா பல மதங்களை கொண்ட ஒரு நாடு. அனைவருக்கும் தத்தம் மதங்களை பின்பற்ற உரிமை உள்ளது. அதே சமயம் ஆத்திகமாக இருந்தாலும் சரி, நாத்திகமாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரின் கருத்தும் மதிக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் லாலு தெரிவித்தார்.
ராமர் பற்றி தமிழக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்த கருத்து பற்றி லாலுவிடம் கேட்டபோது, "அவர் என்ன கூறினார் என்று எனக்கு தெரியவில்லை. அது பற்றி கருத்து சொல்வது பொருத்தமாக இருக்காது. அது அவரது தனிப்பட்ட கருத்து. கவிஞர் கபீர் கூட, உருவ வழிபாடு பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார். எனவே விமர்சனங்களை இந்த வகையில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நான் ஒரு ராம பக்தன். எனக்கு மத நம்பிக்கை உள்ளது. ஆனால் நாட்டில் மத நம்பிக்கை இல்லாத பலர் உள்ளனர். அது அவர்களின் பிரச்சினை'' என்றார்.