''விரைவில் குணமடைந்து தீவிர அரசியலுக்கு மீண்டும் வருவேன்’’ என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் பா.ஜனதா கட்சியின் 3 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. ராமர் பிரச்சனை மற்றும் இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்த பிரச்சினை ஆகிய பரபரப்புக்கு இடையே இந்த கூட்டம் நடைபெறுகிறது. கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங், நிர்வாக குழு கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசினார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலை காரணமாக இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் அனுப்பிய கடிதத்தில், "உடல் நலக்குறைவு காரணமாக கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. ஆனால், விரைவில் உங்கள் மத்தியில் நான் இருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. மத்தியில் அரசியல் ஸ்திரத்தன்மை, நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழ்நிலையில் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ள ஒரு சகாப்தத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்களை ஒன்றுபட்டு சந்திக்க வேண்டும்'' என்று வாஜ்பாய் கூறியுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், தனது பிரபலமான கவிதை ஒன்றில் இருந்து வாஜ்பாய் எடுத்துக்காட்டிய ஒரு வரி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. "சொந்த கட்சிக்காரர்களே தன்னை சுற்றி தடையாக இருப்பது'' போல் அந்த வரி அமைந்துள்ளது. அந்த வரி நேற்றைய கூட்டத்தில் கட்சியின் தலைமை பிரச்சினை பற்றிய விவாதத்துக்கு வழிவகுத்தது.
இதுகுறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், "வாஜ்பாய், அத்வானி இருவருமே கட்சியின் மதிப்பிற்குரிய உயர்ந்த தலைவர்கள். தலைமை பிரச்சினை பற்றி கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. உரிய நேரத்தில் அதுபற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். குழப்பம் எல்லாம் உங்களிடம் (பத்திரிகையாளர்கள்) தான்'' என்று தெரிவித்தார்.