இன்சாட்-4சிஆர் ஒரு மாதத்தில் செயல்படத் துவங்கும் : மாதவன் நாயர்!

Webdunia

செவ்வாய், 4 செப்டம்பர் 2007 (13:55 IST)
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.-எஃப்04 விண்கலத்தின் வாயிலாக ஞாயிற்றுக்கிழமை புவிமைய சுழற்சிப் பாதையில் செலுத்தப்பட்ட இன்சாட்-4சிஆர் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஒரு மாதத்தில் செயல்படத் துவங்கும் என்று இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்!

பெங்களூருவில் உலகளாவிய செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்புகளுக்கான சர்வதேசக் குழுவின் 2வது கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், தற்பொழுது 248 கி.மீ. தூரத்தில் புவியைச் சுற்றிவரும் இன்சாட்-4சிஆர், அதிலுள்ள 440 நியூட்டன் திரவ அப்போஜி மோட்டார் இயக்கப்பட்டு, புவியிலிருந்து 2,983 கி.மீ. கொண்ட குறைந்த தூரத்திற்கும் (பெரீஜி), புவியிலிருந்து 30,702 கி.மீ. அதிகபட்ச தூரத்திற்குமான (அப்போஜி) சுழற்சிப் பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று கூறினார்.

பூமத்திய ரேகையை நோக்கிய 11.1 டிகிரி சாய்வில் இந்த செயற்கைக்கோள் பூமியைச் சுற்றிவரும் என்று மாதவன் நாயர் கூறினார்.

2012 ஆம் ஆண்டிற்குள் நமது செயற்கைக்கோள்களை இயக்கும் தனித்த அமைப்பு ரூ.1,600 கோடி செலவில் நிறுவப்படும் என்றும், அது தற்பொழுது சுழற்சியில் உள்ள 7 செயற்கைக்கோளைக் கொண்ட இயக்க அமைப்பாக இருக்கும் என்றும் மாதவன் நாயர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்