அணு ஒப்பந்தம் : இடது, பாஜக தவறு - அணு விஞ்ஞானி!

Webdunia

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2007 (17:10 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தம் நமது நாட்டின் நலனிற்கு உகந்த வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது என்று அணு விஞ்ஞானியும், இந்திய அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவருமான எம்.ஆர். சீனிவாசன் கூறியுள்ளார்!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து சிறப்புரையாற்றிய விஞ்ஞானி சீனிவாசன், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் நிச்சயம் ஒரு உந்துதலாக இருக்கும் என்று கூறினார்.

இன்றுள்ள சூழலில் நமது நாட்டில் எதிர்கால அணு எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு இந்த ஒப்பந்தம் உள்ளது என்று கூறிய சீனிவாசன், இந்த ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகள் தெரிவித்து வரும் எதிர்ப்பு நமது நாட்டின் எரிசக்தித் தேவையை கருத்தில் கொள்ளாமல், அமெரிக்க எதிர்ப்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளது என்று கூறினார்.

அமெரிக்காவுடன் நெருங்கிச் சென்று 123 ஒப்பநதத்தில் இந்தியா கையெழுத்திட்டதை இடதுசாரிகளால் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறிய சீனிவாசன், இப்பிரச்சனையில் பாஜக-வின் நிலைப்பாட்டையும் கண்டித்தார்.

1998 ஆம் ஆண்டு போக்ரானில் அணு குண்டு சோதனை நடத்துவதற்கு அனுமதி தந்த பா.ஜ.க., தொடர்ந்து சோதனைகள் நடத்துவதற்கு சுய கட்டுப்பாடு விதித்துக் கொண்டுள்ளதாக அறிவித்தது மட்டுமின்றி, எந்தவொரு நாட்டிற்கு எதிராகவும் முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்டு தற்பொழுது அவர்கள் இறையாண்மை பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறினார்.

இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் அமெரிக்கா சென்றிருந்த போது அணு சோதனை நடத்துவதற்கு எதிராக இந்தியா கொண்டுள்ள சுய தடையை நிரந்தரத் தடையாக மாற்றவும் ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்டிய பேராசிரியர் சீனிவாசன், இதற்கு மேலும் 123 ஒப்பந்தத்தின் மீது பேச்சுவார்த்தை நடத்த இயலாது என்றும், அந்த கட்டத்தை கடந்துவிட்டதாகவும் கூறினார்.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொண்டால் நமது அணு உலைகளுக்கு எரிபொருள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் என்று இடதுசாரிகள் கூறுவதற்கு பதிலளித்த சீனிவாசன், இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமது தேவையை நிவர்த்தி செய்து கொள்வதற்கான வழிமுறைகள் ஒப்பந்தத்தில் உள்ளது என்றும் கூறினார்.

இந்த ஒப்பந்தம் அணு எரிபொருளை பெறுவதற்கு மட்டுமின்றி, உயர் அணு சக்தி தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கும் வாய்ப்பை உருவாக்கும் என்று சீனிவாசன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்