கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேற்கு வங்கத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கொல்கத்தா நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. வட மாநிலங்களில் இதுவரை மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் மஹாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பேருந்து, ரயில், விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தின் பிடியிலிருந்து மஹாராஷ்டிர மாநிலம் மீண்டு வரும் நிலையில் அண்டை மாநிலமான குஜராத்தில் கன மழை பெய்ய தொடங்கிவிட்டது.
கடந்த 3 நாட்களாக குஜராத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் எல்லாம் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
குஜராத்தில் மழைக்கு இதுவரை 60 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மழையால் மாநிலத்தின் முக்கிய தொழிலான நெசவுத் தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு வெள்ளப்பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார். நிவாரணப் பணிக்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று அப்போது மோடியிடம், பிரதமர் உறுதியளித்தார்.
மேற்கு வங்கத்திலும் நேற்று முன் தினம் முதல் கடும் மழை பெய்து வருகிறது. தலைநகர் கொல்கத்தாவில் 174 மி.மீ. மழை பெய்துள்ளதால்,மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் பேருந்து, ரயில், விமான போக்கு வரத்து ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில், மழை மேலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர்.