இந்தியன் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம்: விமான சேவை பாதிப்பு

Webdunia

புதன், 13 ஜூன் 2007 (11:09 IST)
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியன் விமான நிறுவன ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விமான சேவை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இந்திய விமான நிறுவன ஊழியர்கள், சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இந்திய விமான நிறுவன நிர்வாகத்துடன் இது குறித்து நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, நேற்று இரவு முதல் இந்தியன் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த நிவாகம், தற்போது அதில் இருந்து பின்வாங்கியதால் தான் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஊழியர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் அருண் குமார் தெரிவித்தார்.

துப்புறவாளர்கள், சுமை தூக்குவர்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் சுமார் 15 ஆயிரம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நேற்று இரவு முதல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

இந்தியன் விமான நிறுவன ஊழியர்கள் இந்த திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் டெல்லி, ஹைதரபாத், மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நாடெங்கிலும் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


வெப்துனியாவைப் படிக்கவும்