யுஎஸ் பிரச்சனை நமது பிரச்சனையல்ல : பிரணாப்!

Webdunia

ஞாயிறு, 10 ஜூன் 2007 (13:34 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு உருவாக்கப்பட வேண்டிய 123 ஒப்பந்தத்திற்கு உருவாகியுள்ள தடை அமெரிக்காவின் பிரச்சனைதானே தவிர, அதனை நாம் ஏற்க முடியாது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்!

சி.என்.என்.-ஐ.பி.என். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி, 123 ஒப்பந்தத்தை உருவாக்குவதில் அவர்களுக்குள்ள (யு.எஸ்.) சட்ட சிக்கலை அவர்கள்தான் தீர்க்க வேண்டும் என்றும், அந்தப் பிரச்சனைகளை நம் மீது சுமத்தக்கூடாது என்று அவர்களிடம் தெரிவித்துவிட்டதாகக் கூறினார்.

நமது அணு உலைகளுக்கு அமெரிக்கா அளிக்கும் யுரேனிய எரிபொருளை பயன்படுத்திய பிறகு கிடைக்கும் கழிவை மறு ஆக்கம் செய்யும் உரிமையை நாம் விட்டுத்தர முடியாது என்று கூறிய பிரணாப் முகர்ஜி, அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்க அணுக் கழிவை மறு ஆக்கம் செய்யும் தனி மையத்தை ஏற்படுத்தி அதனை சர்வதேச அணு சக்தி கண்காணிப்பு முகமையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது சாத்தியமல்ல என்றும் கூறினார்.

ஜப்பான், சுவிட்சர்லாந்து, ஈரோடாம் ஆகியவற்றுடன் அமெரிக்கா செய்து கொண்டுள்ள அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தகளையொட்டிய ஒரு ஒப்பந்தத்தை நம்மால் ஏற்க இயலாது என்று கூறிய பிரணாப், இம்மூன்று நாடுகளும் அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டவை என்றும், ஆனால் இந்தியா அந்த வகைக்கு உட்பட்ட நாடு அல்ல என்றும், எனவே இந்தியாவிற்கென சிறப்பான தனித்த ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்கா முன்வர வேண்டும் என்றும் கூறினார்.

அணுக் கழிவை மறு ஆக்கம் செய்யும் உரிமையற்ற ஒரு ஒப்பந்தம் இந்தியாவிற்கு ஏற்கத்தக்கதல்ல என்று கூறிய பிரணாப் முகர்ஜி, தாராபூர் அனுபவம் மீண்டும் ஏற்படுவதை விரும்பவில்லை என்று கூறினார்.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்பது பிரதமரும், அமெரிக்க அதிபரும் கையெழுத்திட்டு 2005 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கைக்கும், 2006 மார்ச் மாதம் 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் அளித்த உறுதிமொழிக்கு உட்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.

அணுக் கழிவை மறு ஆக்கம் செய்யும் உரிமையை இந்தியா கோருவதால் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடியுமா என்று கேட்டதற்கு, "அது ஒரு தீர்வு காணப்பட முடியாத பிரச்சனை அல்ல. அதற்கு ஒரு வழியை நாம் ஏற்படுத்த முடியும்" என்று பிரணாப் பதிலளித்தார். (யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்