சீனாவில் 22 குழந்தைகளுக்கு கத்திகுத்து!

வெள்ளி, 14 டிசம்பர் 2012 (17:28 IST)
சீனாவின் மத்தியில் உள்ள ஹெனான் மாகாணத்திற்கு உட்பட்ட சென்பெங் கிராமத்தில் பள்ளிக்குச் சென்ற 22 குழந்தைகளை, இளைஞன் ஒருவன் கத்தியால் சரமாரியாகக் குத்தினான். குழந்தைகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை வழக்கம் போல் மாணவ மாணவிகள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பள்ளி நுழைவாயில் அருகே நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞன், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த குழந்தைகளை திடீர் என்று கண்மூடித்தனமாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த 22 குழந்தைகள் இரத்த வெள்ளத்தில் அலறித் துடித்தனர்.

காயமடைந்த குழந்தைகள் அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 2 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹெனான் நகர மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தப் படுபாதக செயலில் ஈடுபட்ட அந்த இளைஞனை அனைவரும் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

சமீப காலமாக சீனாவில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு சீனாவின் மற்றொரு பகுதியில் மழலையர் பள்ளிக்குள் நுழைந்த ஒருவன் 28 குழந்தைகளையும், 2 ஆசிரியைகளையும் கத்தியால் குத்தி காயப்படுத்தினான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்