தெ.ஆப்பிரிக்க போலீஸ் அராஜகம் : 36 சுரங்கத் தொழிலாளர்கள் சுட்டுக் கொலை

வெள்ளி, 17 ஆகஸ்ட் 2012 (19:20 IST)
FILE
தென் ஆப்பிரிக்காவில் உள்ள மரிகானாவில் லான்மின் பிளாட்டினம் சுரங்கத்தில் தொழிலாளர்கள் தீவிர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் போலீசுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில் 36 தொழிலாளர்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டது நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குண்டுதுளைக்காத ஜாக்கெட்டுகளுடன் குதிரை மீது வந்த போலீஸ் படையினர் தொழிலாளர்கள் மீது கண்மூடித் தனமாகச் சுட்டனர் இதில் 36 பேர் பலியாகினர். தொழிலாளர்கள் பக்கத்திலிருந்தும் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய சம்பளத்தைக் காட்டிலும் 3 மடங்கு சம்பள உயர்வு கேட்டு தொழிலாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் தொழிற்சங்கம் கூட வேலைக்குத் திரும்புமாறு கூறியிருந்தது.

கண்ணீர்புகை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்தல் என்று பல்வேறு முறைகளைக் கையாண்ட பிறகு தற்காப்பிற்காகவே சுட்டோம் என்று வழக்கம் போல் போலீஸ் பஜனை பாடியுள்ளது.

போலீஸாரின் இந்த மிருகவெறித் தாக்குதலுக்கு தென் ஆப்பிரிக்க அரசியல் கட்சிகள், அனைத்து சமூக அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இதனால் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேகப் சூமா தனது மொசாம்பிக் பயணத்திலிருந்து பாதியிலேயே நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

நிறவெறி உச்சத்திலிருந்த காலத்தில் ஷார்ப்வில் மற்றும் சொவேட்டோவில் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கும் இதற்கும் எந்த வித வேறுபாடுமில்லை என்று அங்குள்ள மக்கள் அமைப்புகள் கூறத் தொடங்கியுள்ளன. அப்போது போலீஸ் சிறுபான்மை வெள்ளை ஆதிக்கவெறியர்களின் சொல்படி கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதில் பல பள்ளிச் சிறுவர் சிறுமியர்களும் பலியானதை தற்போது இந்தத் துப்பாக்கிச் சூட்டை முன்வைத்து நினைவு கோருகின்றனர் அந்த நாட்டு மக்கள்.

நிறவெறிக்கால முடிவுக்குப் பிறகு மக்கள் மீது நடத்தப்படும் மிக மோச்மான தாக்குதல் இதுவே என்பதால் அந்த நாட்டு அரசு இதனை மிகவும் உணர்வு பூர்வமாக அணுகும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்