இனப் பிரச்னைக்கு இந்தியாவின் தீர்வு தேவையில்லை: ராஜபக்ச

சனி, 4 பிப்ரவரி 2012 (19:44 IST)
தமிழர் பிரச்னைக்கு இந்தியா உள்ளிட்ட எந்த ஒரு வெளிநாடுகளின் தீர்வு திட்டங்களும் இலங்கைக்கு தேவையில்லை என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக, அதே சமயம் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரச்னைக்கு இந்தியா வலியுறுத்தி வரும் இலங்கை அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டதிருத்தத்தை மறைமுகமாக குறிப்பிட்டே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையின் 64 வது சுதந்திர தினத்தையொட்டி இன்று உரையாற்றிய அவர்,இலங்கையில் 50 வருடங்களாக கிடைக்காத சுதந்திரத்தை மூன்று வருடங்களில் பெற்றுக்கொடுத்ததாக குறிப்பிட்டார்.

இலங்கையின் பிரச்னைகளுக்கு வெளிநாடுகளில் உள்ள பிரிவினைவாதிகளே காரணம் என்று குற்றம் சாட்டிய அவர்,அந்த பிரிவினைவாதிகளிடம் இருந்தே இலங்கையில் பிரச்னைகளை ஏற்படுத்துபவர்களுக்கு நீரும்,எண்ணெய்யும் கிடைப்பதாக குறிப்பிட்டார்.

இலங்கை நாட்டின் குறிப்பிட்ட பிரதேசம் ஒரு இனத்திற்கு சொந்தமானது என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது.இலங்கை நாடு அனைத்து இனத்திற்கும் சொந்தமானது என்று கூறிய அவர்,"கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு"வின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

இலங்கையின் பிரச்னைகளுக்கு வெளிநாடுகளின் தீர்வு திட்டங்கள் தேவையில்லை.வெளிநாட்டு தீர்வு ஒன்று இலங்கையில் திணிக்கப்படுமானால் அது,ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்தக்கூடியதாக அமைந்துவிடும்.இதனை கருத்திற்கொண்டே நாடாளுமன்ற தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய பிரச்னைக்கு தீர்வு காணும் சக்தி நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு மாத்திரமே உண்டு.

இந்த நாடாளுமன்ற தேர்வுக்குழுவில் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து தேசிய பிரச்னைக்கு தீர்வு காண்பது அனைத்து கட்சிகளின் பெரிய பொறுப்பாகும் என ராஜபக்ச மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்