இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை: ஐ.நா. ஆலோசனை
புதன், 2 நவம்பர் 2011 (13:10 IST)
இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்வது குறித்து ஐ.நா. மீண்டும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றபோதும், போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்துவது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் ஆலோசனை நடத்தி வருவதாக ஐ.நா. வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசு, சுயமான விசாரணைகளை நடத்தாத நிலையில், வெளியார் தலையிடுவதை விரும்பவில்லை என்றும், அனைத்துலக விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த செப்ரெம்பர் 12 ஆம் தேதி ஐ.நா. பொதுச்செயலர் பான் கீமூன், நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் அனுப்பியிருந்தார்.
இலங்கையில் நிலையான அமைதி ஏற்பட குற்றங்களுக்கு பொறுப்புக் கூறப்படுவதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும், அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதும் அவசியமானது என்று ஐ.நா பொதுச்செயலர் அதில் குறிப்பிட்டுள்ளார் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 23 ஆம் தேதி இலங்கை ஜனாதிபதியை பான் கீ மூன் சந்தித்த போதும், பொறுப்புக் கூறும் நம்பகமான தேசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே இலங்கை அரசு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது எனவும் ஐ.நா. தகவல் கூறியுள்ளது.
இந்தநிலையிலேயே, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்துவது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் முடிவு செய்யவுள்ளதாக ஐ.நா. தகவல் மேலும் தெரிவிக்கிறது.