இலங்கை தொடர்பான ரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2011 (14:53 IST)
அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகத்திற்கும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான ரகசியத்தகவல் ஆவணங்களை "விக்கிலீக்ஸ்" நேற்றிரவு வெளியிட்டுள்ளது.
1986 ஆம் ஆண்டு தொடங்கி 2010 ஆம் ஆண்டு ஜனவரி வரையிலான காலப்பகுதியில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால், அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகத்துடன் பரிமாறிக் கொள்ளப்பட்ட 1,646 ஆவணங்களையே "விக்கிலீக்ஸ்" வெளியிட்டுள்ளது.
இவற்றில் விடுதலைப் புலிகள் தொடர்பான ஆவணங்களும், இலங்கை அரசு வெளிநாடுகளுடன் கொண்டுள்ள ரகசியத் தொடர்புகள் தொடர்பான ஆவணங்களும் அடங்கியுள்ளன.
இலங்கை தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்தினால் பரிமாற்றப்பட்ட ஆவணங்கள் சிலவற்றை விக்கிலீக்ஸ் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இலங்கை தொடர்பான ஆயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள், ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளதானது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே நேற்று வெளியான ஆவணங்களில் ஒன்றில், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தைத்தைப் பெறுவதற்காக, இலங்கை அதிகாரிகளுக்கு சீனா பெருந்தொகைப் பணத்தை லஞ்சமாக வழங்கியதாக அமெரிக்கா நம்புவதாக கூறப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தத்தை சீன நிறுவனங்கள் பெறுவதற்கு லஞ்சமும், அரசியல் செல்வாக்குமே காரணமாக அமைந்தது என்று,அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய ரகசிய ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.