இந்தியாவுடன் மோதல் இல்லை: சீனா அறிவிப்பு

திங்கள், 13 டிசம்பர் 2010 (19:23 IST)
இந்தியாவுடன் மோதல் போக்கு ஏதுமில்லை என்றும், காஷ்மீரிகளுக்கு தனி விசா மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் விவாதிக்கப்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

சீன பிரதமர் வென் ஜியாபாவோ, வருகிற புதன்கிழமையன்று இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள நிலையில், சீன அயலுறவுத் துறை உதவி அமைச்சர் ஹூ ஜென்குவே பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது மேற்கண்டவாறு கூறிய அவர், இந்தியாவுடன் விவாதிப்பதிலிருந்து எந்த ஒரு பிரச்சனையையும் நாங்கள் விலக்கி வைக்கவில்லை என்றும், விசா வழங்குவது போன்ற பிரச்சனைகளில் சம்பந்தப்பட்ட இருநாடுகளிடையேயான அதிகாரிகள் பேசுவார்கள் என்றும் கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சியை சீனா ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்தில் பார்ப்பதோடு, அதன் வளர்ச்சியை ஒரு வாய்ப்பாகவுமே காண்கிறது.

சீன பிரதமரின் இந்திய பயணம், இருநாடுகளின் உறவுகளுக்கான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்