இந்திய எல்லையிலிருந்து படையை குறைக்கிறது பாக்.

வியாழன், 29 ஏப்ரல் 2010 (13:47 IST)
இந்தியாவையொட்டிய எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தமது படையினரில் சுமார் 1 லட்சம் துருப்புக்களை, ஆப்கானிஸ்தான் எல்லையை நோக்கி பாகிஸ்தான் நகர்த்தி வருவதாக அமெரிக்க இராணுவ தலைமையகமான "பென்டகன்" தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில், இந்திய எல்லையையொட்டி ஏராளமான துருப்புக்களை நிறுத்தியிருந்தது பாகிஸ்தான்.

ஆனால் ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவும் தாலிபான் தீவிரவாதிகளாலும், உள்நாட்டில் செயல்படும் தீவிரவாத குழுக்களாலும்தான் தமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலே தவிர, இந்தியாவினால் அல்ல என்பதை பாகிஸ்தான் தற்போது உணர்ந்து கொண்டுள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தானையொட்டிய பகுதியில் இயங்கும் தாலிபான்கள் மற்றும் இதர தீவிரவாத குழுக்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை பலப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாகவே இந்தியவையொட்டிய எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தமது படையினரில் சுமார் 1 லட்சம் துருப்புக்களை, ஆப்கானிஸ்தான் எல்லையை நோக்கி பாகிஸ்தான் நகர்த்தி வருவதாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் "பென்டகன்" தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்