இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்கின்றன: அமெரிக்கா குற்றச்சாற்று

சனி, 13 மார்ச் 2010 (13:15 IST)
இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகம் குற்றம்சாற்றியுள்ளது.

அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகத்தினால் வருடந்தோறும் வெளியிடப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான அநிக்கையின் 2009 ஆம் ஆண்டின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

இதில் மேற்கூறிய குற்றச்சாற்று இடம்பெற்றுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர் தற்போதும், கடத்தல் மற்றும் காணாமல் போகும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன.

இந்த செயல்களில் ஈடுபடும் அரசாங்க ஆதரவு குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.அத்துடன் பல்வேறு வழிகளிலும் கைது செய்யப்படுகின்றவர்கள் துன்புறுத்தப்படல், மனிதாபிமானம் அற்ற வகையில் பலவந்தப்படுத்தப்படல், மற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்படல் போன்றனவும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை இடம்பெயர்ந்த முகாம்களில் உள்ள மக்கள் தமக்கான சுதந்திரம் இன்றி நெருக்கடியான சூழலில் வாழ்க்கை நடத்துகின்றனர்.அவர்கள் மிகவும் அசாதாரணமான ஒரு பிரதேசத்தில் அடைத்து வைக்கப்பட்டு, அவர்களின் சுதந்திரம், உரிமை என்பன முற்று முழுதாக மீறப்பட்டுள்ளன. அத்துடன் சட்டத்துக்கு புறம்பான கைதுகளும், தடுத்து வைப்புகளும் அரசாங்கத்தினால் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல், தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களால் அவர்கள் தமக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்படும் போதும், அவை கைவிடப்படுகின்றன.

அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் நீதிபதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.எனினும் இலங்கையில் பெரும்பாலும் அவ்வாறு நடைபெறுவதில்லை.

இதற்கிடையே பல்வேறு சந்தர்பங்களில், இலங்கை ஜனாதிபதியினால் இராணுவத்தில் இருந்து தப்பி சென்றவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.சட்டங்கள் பொது மக்களின் பாவனைக்கு இல்லாது போயுள்ளமைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்துடன் சட்டவிரோத செயல்கள், அதாவது காணி உள்ளிட்ட சொத்துக்கள் அபகரிக்கப்படல், மற்றும் சுரண்டப்படல், குடும்ப விவகாரங்களில் தலையிடல் போன்ற பல்வேறு முறையற்ற செல்கள் இடம்பெறுகின்றன.

அத்துடன் உள்வீட்டு வன்முறைகள் பெரிதாகி, வெளிமட்ட சக்திகள் லாபம் காணல், கொலை கடத்தல்களின் ஊடாக பொது மக்கள், மனோரீதியான துன்புறுத்தல் மற்றம் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாதல் தண்டனைக்கு உட்படுத்தல் போன்றன பதிவாகியுள்ளன.

கடந்த வருடம் மே மாதம் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சிறுவர் போராளிகள் கைது செய்யப்பட்டனர், எனினும் அவர்கள் சிலர் விடுவிக்கப்பட்ட போதிலும் பெரும்பான்மையானவர்களின் நிலைமை என்ன வென்று இதுவரையில் தகவல் வெளியாகவில்லை

எனினும் அரசாங்கம் அவர்களின் புனர்வாழ்வுக்காக குறிப்பிடத்தக்க வினைத்திறனான முனைப்புகளை மேற்கொண்டுள்ளது என்பதுடன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் தமது சிறுவர் போராளிகளை விடுவித்துள்ளதுடன், இன்னும் சிலர் மீதமாக உள்ளமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம்.

இதேவேளை நாட்டில் சுதந்திரமான ஊடக செயல்பாடுகளுக்கும், கருத்து வெளியிட்டு சுதந்திரத்துக்கும் பாரிய பாதிப்புகள் காணப்படுகின்றன. பல்வேறு ஊடகவிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்துக்கு எதிரான ஊடகவியலாளர்கள் கடத்தப்படல் மற்றும் காணாமல் போதல் போன்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

அத்துடன் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பிலும் குறிப்பிடத்தக்க திருப்பங்கள் இடம்பெறவில்லை.

இதேவேளை இலங்கையில் இணையத்தளம் சுதந்திரமும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது. சில செய்தி இணையத்தளங்கள் குறிப்பாக தமிழ்நெற் போன்றன இலங்கையின் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இனிவரும் காலத்தில் பல இணையத்தள தணிக்கை வேலைகளை செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அது இணையத்தள ஊடக சுதந்திரத்துக்கு எதிராக பாரிய பங்கம் விளைவிப்பாக அமையும்.

ஒன்று கூடல் மற்றும் பேரணி நடத்தும் சுதந்திரம், சங்கம் அமைக்கும் சுதந்திரம், மதப்பின்பற்றல் சுதந்திரம், போன்றனவும் குறிப்பிட்ட சில குழுக்களுக்கே காணப்படுகின்றன.

இதற்கிடையில் இடம்பெயர்ந்த மக்கள் தமக்கான பூரண சுதந்திரத்துடன் குடியமர்த்தப்பட வேண்டியவர்கள். எனினும் அவர்கள் முறையாக குடியமர்த்தப்படாமல் உள்ளமையும் நெருக்கடியான நிலையில் வாழ்கின்ற தன்மையையும் இலங்கையில் காணக்கூடியதாக இருக்கிறது.

குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களுக்கான தனியான குடியுரிமை ஆவணங்கள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த மக்களுக்கான ஆள் அடையாள அட்டை இல்லாமை, போன்ற சிக்கல்கள் எழுந்துள்ளன. இதனால் தற்போது அவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையில், மேலதிகமாக அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக கடந்த ஆண்டில் மாத்திரம் 70 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுபான்மை மக்களின் தேர்தல் மற்றும் அரசியல் பிரவேசங்கள் குறைமட்டத்தில் காணப்படும் அதேவேளை,இந்த நிலைமை எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.

இதற்கிடையில் அகதிகளுக்கான அந்தஸ்து வழங்காமை, நாட்டில் இருந்து தப்பி செல்லும் சம்பவங்கள், சிறுவர் பெண்கள் மீதான வன்முறைகள், மதிப்பளிக்காமை, தனிநபர் நெருக்கடி போன்றனவும் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்