ஈராக் தேர்தலில் 50 - 60 % வாக்குப்பதிவு

திங்கள், 8 மார்ச் 2010 (18:03 IST)
ஈராக்கில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 50 முதல் 60 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாக்தாத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை தெரிவித்த ஈராக் தலைமை தேர்தல் ஆணையர் ஃபராஜ் அல் - ஹைதாரி, தேர்தலில் துல்லியமாக எவ்வளவு வாக்குகள் பதிவானது என்பது குறித்த விவரம் பின்னர் வெளியிடப்படும் என்றார்.

ஈராக்கில் கடந்த 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 76 விழுக்காடு பதிவானது.அதனுடன் ஒப்பிடுகையில் இந்த முறை குறைந்த விழுக்காடே பதிவாகி உள்ளது.

அதே சமயம் கடந்த கடந்த ஆண்டு நடந்த மாகாண தேர்தலில் பதிவான வாக்குகளை விட, தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் அதிக விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று நடைபெற்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் நூரி அல் - மாலிக்கிற்கே வெற்றி வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்