முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது குண்டு வீச்சு : 64 நோயாளிகள் படுகொலை
சனி, 2 மே 2009 (18:05 IST)
வன்னியில் பாதுகாப்பு வலயத்திற்குள் இயங்கிவந்த ஒரே ஒரு தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்க இராணுவம் இன்று இரண்டு முறை தொடர்ந்து குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 64 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 87 பேர் படுகாயமுற்றனர்.
பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் இந்த தற்காலிக மருத்துவமனை இயங்கிவருகிறது என்பதை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வரைபடம் அளித்து உறுதி செய்திருந்த நிலையில், திட்டமிட்டே மருத்துவமனையை குறிவைத்து இன்று காலை 9.00 மணிக்கு எறிகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியுள்ளது சிறிலங்க இராணுவம். இதில் 23 பேர் - நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் - கொல்லப்படனர், 34 பேர் படுகாயமுற்றனர்.
இத்தாக்குதல் முடிந்து கொல்லப்பட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவந்த நிலையில் மீண்டும் 10.30 மணிக்கு தொடர்ந்து பீரங்கித் தாக்குதல் நடத்தியுள்ளது சிறிலங்க இராணுவம். இதில் மேலும் 41 பேர் கொல்லப்பட்டனர், 53 பேர் படுகாயமுற்றனர் என்று தங்களுடைய செய்தியாளர் தெரிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையதளம் கூறியுள்ளது.
அந்த மருத்துவமனை இருப்பிடம் குறித்த விவரங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கொடுத்திருந்தது மட்டுமின்றி, அப்பகுதியை சிறிலங்க இராணுவத்தின் ஆளில்லா ஆய்வு விமானமும் கண்காணித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து மக்களை அச்சுறுத்தி வெளியேற்றும் நடவடிக்கையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதென கூறப்படுகிறது. பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு கடந்த வெள்ளிக் கிழமை விமானம் மூலமாக சிறிலங்க அரசு கைப்பிரதிகளை வீசியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.