இராக்கில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட நாசவேலைகள், அமெரிக்க படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெறும் சண்டைகள் ஆகியவற்றிற்கு 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் மட்டும் சராசரி மாதம் ஒன்றுக்கு 2000 அப்பாவி மக்கள் பலியாகியிருப்பதாக இராக் அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமெரிக்கப் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொள்ளபடுவதால் நிலைமைகள் மேலும் மோசமடைந்து வந்திருப்பதாக இராக் அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும் இராக் அரசும், அமெரிக்க ராணுவ அதிகாரிகளும் பெருகி வரும் பலி எண்ணிக்கை குறித்து குறைவான தகவல்களையே வெளி உலகிற்கு அறிவிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 355 அப்பாவி ஈராக் மக்கள் குண்டு வெடிப்பு உள்ளிட்ட வன்முறைகளுக்கு பலியாகியுள்ளதாக இராக் அரசு கூறுகிறது.
ஆனால் இந்த பலிப் பட்டியலில் படுகொலையுண்ட 80 ஈரான் புனித யாத்ரீகர்கள் சேர்க்கப்படவில்லை.
ஏப்ரலில் பலி அதிகமாகியிருப்பதாக கூறும் இராக் அரசு, 2006, 07 ஆம் ஆண்டுகளில் பிரிவினைவாத தீவிரவாதங்களின் எழுச்சி காலக் கட்டத்தில் பலியான மக்களை விட இது குறைவுதான் என்றும் கூறியுள்ளது.
அதே போல் அமெரிக்க படையினருக்கும் இழப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளது. ஏப்ரலில் மட்டும் 18 ராணுவ வீரர்கள் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.
மிகவும் பயங்கரமான காலக் கட்டம் என்று இராக் அரசால் வர்ணிக்கப்படும் 2006, 07ஆம் ஆண்டுகளில் மாதம் ஒன்றிற்கு சராசரியாக 100 அமெரிக்க ராணுவ வீரர்கள் தாக்குதலில் பலியாகியுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கையை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஏற்கவில்லை.