சிறிலங்க அரசு எங்களை மதிக்கவில்லை: அமெரிக்கா

புதன், 22 ஏப்ரல் 2009 (12:51 IST)
இலங்கையில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலைத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை சிறிலங்க அரசு மதிக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் ராபர்ட் உட்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் போரை நிறுத்தி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி இலங்கை அதிபர் ராஜபக்ச மற்றும் விடுதலைப்புலிகளுக்கு நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தோம். இதேபோல சர்வதேச நாடுகளும் வேண்டுகோள் விடுத்தன.

ஆனால் இரு தரப்பினருமே எங்களை மதிக்கவில்லை. பலமுறை வற்புறுத்திய பிறகும் பல்வேறு முயற்சிகளை எடுத்த போதும் அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை.

இப்போது ஏராளமான மக்கள் போர் பகுதியில் இருந்து வெளியேறி இருப்பது நல்ல முன்னேற்றமாக தெரிகிறது. மக்கள் பாதுகாப்பு வலயங்களின் மீது தாக்குதல் நடத்துவதை சிறிலங்க அரசு கைவிட வேண்டும்.

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளேக், சிறிலங்க அரசிடமும், ராணுவத்திடமும் தினசரி தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என ராபர்ட் உட்ஸ் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்